தமிழக செய்திகள்

"தவெகவின் ஊழல்வாதிகளை எப்போது ஒழிக்கப் போகிறீர்கள்?"- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி

தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதை குறிப்பிட்டு டிடிவி தினகரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,"தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்ப திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் விஜய், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது? எப்படி ஒழிக்கப் போகிறார்?” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ?.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.