தமிழக செய்திகள்

‘முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்வதே அறம்’ - சீட் ஒதுக்கப்படாதது குறித்து ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்

ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவு என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

விசிகவின் முக்கிய முகமாக இருக்கும், ஆளூர் ஷா நவாஸிற்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

“2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.

இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.

அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளூர் ஷா நவாஸ் தற்போது நாகை சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.