தமிழக செய்திகள்

‘மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை பேசுவதால் என்ன பயன்?’ - முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

தொகுதி வரையரையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மாலை தியாகராயர் நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

சீர்காழியில் ஸ்டாலின் என்னை விமர்சித்துள்ளார். தேர்தல் நடக்கும் காலத்தில், நாடாளுமன்றத்தில் தொகுதி வரையறை செய்ய முயற்சிக்கிறார்கள் என்று பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே, இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது. இதை பற்றி பேசுங்கள்.

தொகுதி வரையறை நாடு முழுவதும் உள்ள பிரச்னை. தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை. தொகுதி வரையரையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். இப்போது நடக்கிற தேர்தல் என்ன தேர்தல்? அது பற்றி பேசுங்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் பற்றி பேசிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்..? எப்படியாவது தேர்தல் வரைக்கும் காலத்தை ஓட்ட வேண்டும், எப்படியாவது அதிமுக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு பேச வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்.

என்னை அடிமை பழனிசாமி என்று சொல்கிறார். எத்தனை தடவை இதையே கீறல் விழுந்த ரெக்கார்டு போல் திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நானும் திருப்பி திருப்பி அதற்கு பதில் சொல்லிவிட்டேன்.

தமிழ்நாடு பற்றி பேசுங்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பிரச்னை.? அதிமுக ஆட்சியில் என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள். அதற்கு பதில் சொல்லத் தயார். அதை விட்டுவிட்டு மத்தியில் இருக்கிற பிரச்னைகளை பற்றி பேசுவதால் என்ன பயன்? தேர்தலுக்கும் அதற்கும் தொடர்பு உண்டா…?

யாருக்கும் அஞ்சமாட்டோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கிற எந்த திட்டமானாலும் ஆதரிப்போம், வரவேற்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்த்து முறியடிப்போம். இது தான் எங்கள் கொள்கை.