தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் நீண்டநாட்களாக மூன்று கோப்பைகளை திறந்துவிடுவதாக கூறிவருகிறார். அதை உடனடியாக திறக்கவேண்டும், அதற்கு ஜோசியக்காரர் சொல்லவேண்டுமா” எனப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “யார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டார் என்பதை அனைவரும் அறிவர்” என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை குறிக்கும் வகையில் பதிலளித்தார்.
ஆனால் உண்மையில் கருணாநிதி ஜோசியம் பார்த்துதான் மஞ்சள் துண்டு அணிந்தாரா, அந்த மஞ்சள் துண்டு குறித்து அவரே கூறியது குறித்து இங்கு காண்போம்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது;
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது.
உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர்.
வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.
வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு - மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர்.
அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கு இடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.
வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் - கழகக் கண்மணிகள்!
கழுத்துப் பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.
இப்படிக் கம்பளிச் சால்வையை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.
அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது.
தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக, இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.
அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப்போல - சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன்.
இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும், கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை.” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.