தமிழக செய்திகள்

தனிப்பெரும்பான்மை பெறாத த.வெ.க: ஆட்சி அமைக்க விஜய்க்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க. வெற்றி பெறவில்லை.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க. உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். மேலும், 118 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி அல்லது தேர்தல் கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும்.

தேர்தல் முடிவுகளின்படி த.வெ.க. 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

த.வெ.க. தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதில், ஒரு தொகுதியில் இருந்து விஜய் ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.

அதேநேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும்.

அப்படி, பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 5 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 தொகுதிகள் என 4 இடங்களும், தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்தன.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு 4 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 1 இடமும், அம.மு.க. கட்சிக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரு கூட்டணிகளில் இருந்தும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும்.

த.வெ.க. ஆட்சி அமைக்க 11 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது.

118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால், த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான உரிமையை ஆளுநர் வழங்கலாம். ஒருவேளை ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.

இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், இரண்டாவதாக அதிக இடங்களைப் பெற்றுள்ள தி.மு.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் கோருவார்.

அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும். அதன்பின் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பது பொது நடைமுறையாக உள்ளது.

இந்நிலையில், தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க. என்ன செய்யவேண்டும்?

திமுக அல்லது அதிமுக கூட்டணி கட்சிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

விஜய்க்கு அதிமுக ஆதரவு அளிக்கலாம். ஆனால் துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை அதிமுக குறிவைக்கும்.

இதற்கிடையே, காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.