செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரெயில் கோட்டை ரெயில் நிலையத்தில் தடம் புரண்டதால் பயணிகள் பாதுகாப்பாக தப்பினர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில் சென்று கொண்டு இருந்தது. இன்று காலை 11 மணி அளவில் அந்த ரெயில் கோட்டை ரெயில் நிலையத்தில் நுழைந்தது.
அப்போது மின்சார ரெயிலின் 7-வது பெட்டி திடீரென தடம் புரண்டது. இதனால் அதன் பின்னால் உள்ள பெட்டிகள் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் மீது உரசியபடி சென்றது.
இதனால் பெரிய அளவில் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். கோட்டை ரெயில் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு அதிகாரிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 7-வது பெட்டி மட்டும் தடம் புரண்டு காணப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து பஸ்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.
கோட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்துவதற்காக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினார்கள்.
இதையடுத்து ரெயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்துவதற்காக மீட்பு ரெயிலில் அதிகாரிகளும், மீட்பு படையினரும் அங்கு வந்தனர். ரெயில்வே கோட்ட மேலாளர் மதுசூதன ரெட்டியும் அங்கு விரைந்தார்.
அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடந்தது. தடம்புரண்ட பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். மதியம் 1 மணி அளவில் தடம் புரண்ட பெட்டி தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. ஆனால் உடனடியாக ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரெயில்கள் பூங்கா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் அங்கிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றன.
கோட்டை மற்றும் கடற்கரைக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. அவை ரத்து செய்யப்பட்டன.