தமிழக செய்திகள்

‘எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி!

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடுதான். அது நீங்கிவிட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்டிருந்த உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பு அணிகளும் இன்று ஒன்றிணைந்தன. மேலும் இருதரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் அளித்த தகுதிநீக்க மனுக்களையும் திரும்பப்பெற்றன.

இந்நிலையில் இந்த ஒன்றிணைவுக்கு பிறகாக எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

“தேர்தலில் தோல்வியை தழுவியதால் சில கருத்துகளை நாங்கள் முன்வைத்தோம். அதுபோல அன்று சட்டமன்றத்தில், மக்களின் ஆதரவைப் பெற்றதால், ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தோம். இதனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எங்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி மனு அளித்தார். நாங்களும் அவர்கள் மீது தகுதிநீக்கம் செய்யக்கோரி மனு அளித்தோம்.

இப்போது இருதரப்பினரும் அந்த மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டோம். அதனை பேரவைத்தலைவர் பிரபாகரிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடுதான். அது நீங்கிவிட்டது. தற்போது ஒற்றுமையாக உள்ளோம். சி.வி.சண்முகம் எங்களுடன்தான் இருக்கிறார். அதிமுக ஒன்றிணைந்துவிட்டது.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்தான்; தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். பதவிக்காக நாங்கள் எங்கும் செல்லவில்லை.” என தெரிவித்துள்ளார்.