தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“கடந்த முறை தேர்தல் நடந்தபோது “ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அதனால் முதலமைச்சராக முடியாது” என்றார்கள். அந்தக் கட்டத்தை உடைத்து, முதலமைச்சராகிவிட்டேன். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், “தொடர்ந்து தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வந்தது இல்லையாம்”.
இந்த முறை, அதையும் உடைத்து இரண்டாவது முறையாக, உங்களுடைய அன்போடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வரத்தான் போகிறான்.
அது ஏதோ பதவிக்காக வருகிறோம் என்று நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதால்தானே தவிர, வேறு அல்ல.
பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏழாவது முறையாக மலரவும், நான் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பதற்கு நல்வாய்ப்பையும் தேடித் தாருங்கள் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய கார்த்திக் மோகன், ஒரு நல்ல இளைஞர். துடிப்பானவர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அந்த சிரித்த முகத்தோடு, உங்களுடைய குறைகளை எல்லாம் கேட்டு, உங்களையும் சிரிக்க வைப்பார். உங்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சியை வர வைப்பார்.
என்ன பிரச்சினை என்றாலும், துடிப்போடு உங்களுக்காகப் பணியாற்றக் கூடிய ஒரு சிறந்த இளைஞரைத்தான் தேர்ந்தெடுத்து, இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என தெரிவித்தார்.