தமிழக செய்திகள்

மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என நிரூபிப்போம்..! உதயநிதி ஸ்டாலின்

கோவையில் இன்று நடக்கும் தி.மு.க இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

மாலை மலர்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு அடுத்த மாதம் 23-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க, மீண்டும் ஆட்சியை தொடருவதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே தி.மு.க. மண்டல அளவில் மாநாடுகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் பணியில் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கவனத்தை செலுத்தி வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பணிகளை முடித்து விட்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தமிழகம் முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.கவில் உள்ள இளைஞரணியினரை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்க தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்தார்.

முதற்கட்டமாக மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல இளைஞரணியினரை இன்று முதல் 3 நாட்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இன்று கோவையில் நடக்கும் தி.மு.க இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து அவர் கோவை-அவினாசி சாலை முதலிபாளையத்தில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலசுக்கு சென்றார்.

அங்கு நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

எத்தனை அரசு நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும், இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்பது எனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போன்ற உணர்வைத் தருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ’களத்தில் இளைஞரணி’ என்ற முன்னெடுப்பால் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்றோம். அதேபோல, தற்போது வரவிருக்கும் சட்டபபை தேர்தலிலும் 100 சதவீத வெற்றியைப் பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

கோவையைத் தங்கள் கோட்டை என்று யார் யாரோ கூறி வருகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், அன்பு கரங்கள்’ திட்டம், மகளிர் உரிமைத் தொகை என பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் திட்டங்களைக் கொண்டு சேர்த்தவர் நமது முதல்வர். இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று மீண்டும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கவே பல கட்சிகள் திணறி வருகின்றனர். மக்களை தினமும் சந்திக்கும் தலைவர் நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவரை போல நாமும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை முடித்து கொண்டு துணை முதல்-அமைச்சர் ஈரோடு செல்கிறார். அங்கு நடக்கும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று இளைஞரணியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கரூரில் நடைபெறும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

24-ந் தேதி காலை 10 மணிக்கு திண்டுக்கல், மாலை 3 மணிக்கு மதுரை, 6 மணிக்கு சிவகங்கை ஆகிய இடங்களிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை, மாலை 3 மணிக்கு கோவில்பட்டி ஆகிய இடங்களிலும் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.