இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை தொடங்குவதற்கு தொழிபதிபர் அம்பானி தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்தியா அல்லது அமெரிக்க கோடீஸ்வரர் எவரும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்க கூடாது என நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இணைய சேவையை வழங்கி வருகிறது.
இருந்தபோதிலும் இணைய சேவை கிடைக்காத கிராமப்புற பகுதிகளில், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் மூலம் இணைப்பை விரிவுபடுத்த நிறுவனங்கள் முயன்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்டார்லிங் நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாடுகளை தொடங்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஆண்டெனக்களை 20 நுழைவாயில் தளங்களில் அமைத்துள்ளது. மேலும் இந்திய பயனர்களின் தரவுகளை நாட்டிற்குள்ளேயே வைத்திருக்க கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த செயற்கைகோள் பிராட்பேண்ட் இணையை சேவையை இந்தியாவில் வழங்குவதற்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் மற்றும் பார்தி ஏர்டெல் குழுமம் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணைய சேவையை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டார்லிங்க் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும் தேவையையும் ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது.
அப்படியிருந்தும் ஏன் இன்னும் உரிமம் இல்லை? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான தலைவரா?” என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ஒப்புதல் வழங்கும் செயல்முறை நியாயமானதாகவும் பாகுபாடற்றதாகவும் உள்ளதாக கூறி, மஸ்க் வைத்த குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்தது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் தலைவர் அம்பானி மீது, எலான் மஸ்க் வைத்த விமர்சனங்களுக்கு நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மஸ்க் அவர்களே, எந்தவொரு கோடீஸ்வரரும் அவர் இந்தியராகவோ அல்லது அமெரிக்கராகவோ இருந்தாலும் ஒரு நாட்டின் கொள்கையை தீர்மானிக்கக் கூடாது.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சமரசம் செய்ய முடியாதவை. ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது.
மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்பை கடைப்பிடித்துக்கொண்டே, தாராள சந்தைகளைப் பற்றி போதிக்க முடியாது.
அமெரிக்கா தனது உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்க சீன மின்சார வாகனங்கள் மீது 100% வரியை விதித்தது, அதேபோல இந்தியாவும் தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்கிறது.
பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவி நிறுவனத்திற்குத் தடை விதித்துள்ளன. ஒரு நாடு தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இருக்கும்போது மட்டும் மற்றது சமமான வாய்ப்பைக் கோர முடியாது.
ஒரு ஜனநாயக நாடாக நமது பலங்களையும் பலவீனங்களையும் இந்தியர்கள் உள்நாட்டில் விவாதித்து, கேள்வி எழுப்பி, சரிசெய்வார்கள்.
இந்தியா ஒரு ஜனநாயகம், காலனி அல்ல. நாம் உலகை வரவேற்கிறோம், ஆனால் எங்களது எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்-மேற்கத்திய சுயநலன்களோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ அல்லது எந்தவொரு கோடீஸ்வரரோ -இந்தியராகவோ அமெரிக்கராகவோ அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.