தமிழக செய்திகள்

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் வரும் அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்..!- அண்ணாமலை

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம்.

ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மலரஞ்சலி

அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.

அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.

கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன்.

அரசியலில் அறநெறி

அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும்.

அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.