தாராபுரம் இடைத் தேர்தலை ஒட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உப்பாறு பாசன விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்துகொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.
விவசாயிகளின் கஷ்டங்கள் அனைத்தும் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 4 மாதங்களாக ஊழல் இல்லாத ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எங்களிடம் நேரடியாக வந்து கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்குத் தரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாகச் செயல்பட்டு வருகிறார். உங்கள் கோரிக்கைகளான பட்டா பிரச்சனை, சாலை வசதி, வாய்க்கால் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் நாங்கள் உடனடியாகச் செய்து தருவோம். நாங்கள் வெறும் வீராப்பு வசனம் பேசிவிட்டுப் போகிறவர்கள் அல்ல. செயலில் காட்டக் கூடியவர்கள்.
உப்பாறு, பரம்பிகுளம், ஆழியாறு திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் தொடர்பாக வரும் 5-ஆம் தேதி கேரளா அரசுடனும், முதலமைச்சருடனும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மனசாட்சியோடு சிந்தித்து, எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் விசில் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.