தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். ஆனால் இந்தாண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது.
இந்த நிலையில் தெற்கு குஜராத் முதல் கேரளம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் கூடலூர், பந்தலூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகி உள்ளது.
மேலும் அங்கு மணிக்கு சுமார் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிட மேற்கூரைகள் சேதம் அடைந்ததுடன் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவை தொடர்ந்து, தமிழக எல்லைப்பகுதிகளில் எந்தவித அவசர சூழலையும் எதிர்கொள்ளும் விதமாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் வருவாய், போலீசார், தீயணைப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறையினரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகுந்த பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.