ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணியின் போது உடைந்தது.
திருத்தணி அடுத்த பட்டாபிராமாபுரம் ஊராட்சியில் அடங்கிய இருளர் காலனியில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணியின் போது உடைந்தது. இதனால் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்லாமல் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி அடைந்து வருகிறார்கள். அவசரத் தேவைக்கு இங்குள்ள ஒரே ஒரு கைப்பம்பு மூலம் தண்ணீர் அடித்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த தண்ணீரும் உப்புநீராக உள்ளதால் சமையலுக்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குடிநீர் கிடைக்கவும், பழுதான தெருவிளக்குகளை சரி செய்யவும் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.