தமிழக செய்திகள்

வைகையில் இருந்து மதுரை கள்ளழகர் திருவிழாவுக்கு தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இந்த ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அணையின் நீர்மட்டம் 35 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் அணையில் இருந்து மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த ஆண்டு மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வருகிற 29-ந்தேதி வரை இந்த தண்ணீர் திறக்கப்படும். மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்கும், மதுரையில் உள்ள வைகை ஆற்றுப்படுகையினை நனைப்பதன் மூலம் குடிநீர் திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் இணைப்பு கால்வாய் மூலம் வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களை கடந்து செல்ல இருப்பதால் 3 மாவட்ட கரையோர மக்கள் இணைப்பு கால்வாயில் இறங்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.92 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவுக்காக 572 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து இல்லை. நீர் இருப்பு 279.26 மி.கன அடி.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக உள்ளது. வரத்து 108 கன அடி. திறப்பு 200 கன அடி. இருப்பு 943 மி.கன அடி.