புழல் ஏரி 
தமிழக செய்திகள்

தொடர் மழை: புழல் ஏரியில் ஒரு வாரத்தில் 3 அடி நீர்மட்டம் உயர்வு

கடந்த ஒரு வாரத்தில் புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு சுமார் 3 அடி உயர்ந்து உள்ளது.

புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், வரும் நாட்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1395 கனஅடியாக உள்ளது. ஏரியில் 2351 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 71 சதவீதம் ஆகும்.

புழல் ஏரி

கடந்த ஒரு வாரத்தில் புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு சுமார் 3 அடி உயர்ந்து உள்ளது. கடந்த 13-ந்தேதி நிலவரப்படி ஏரியின் மொத்த உயரமான 21 அடியில் 14 அடிக்கு தண்ணீர் இருந்தது. தற்போது 17 அடியாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏரியில் தண்ணீர் இருப்பு 20 அடியை நெருங்கியதும் உபரி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிகிறது.

பலத்த மழை

புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், வரும் நாட்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 545 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1466 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்காக 184 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரிக்கு 430 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 485 மி.கனஅடி மட்டும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக மழை கொட்டியது. அதிக பட்சமாக ஊத்துக்கோட்டையில் 9.4 செ.மீட்டர், பூண்டியில் 7.1 செ.மீ. பொன்னேரியில் 6.9 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

கும்மிடிப்பூண்டி-49, பள்ளிப்பட்டு-27, ஆர்.கே.பேட்டை-28, சோழவரம்-20, செங்குன்றம்-16, ஜமீன் கொ ரட்டூர்-18, பூந்தமல்லி-25, திருவாலங்காடு-12, திருத்தணி-53, தாமரைப்பாக்கம்-23, திருவள்ளூர்-14, ஆவடி-34.

SCROLL FOR NEXT