தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3163 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை வேகமெடுப்பதால் வராகநதி, மூல வைகையாறு, கொட்டக்குடியாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்துள்ளதால் விவசாய பணிகளும் மும்முரம் அடைந்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 634 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1782 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 122.70 அடியாக உள்ளது. விரைவில் 123 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3163 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. 255 கனஅடி நீர் வருகிறது. 86 கனஅடி நீர் குடிநீர் திட்டங்களுக்காக திறக்கப்படுகிறது. அணையில் 2191 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடியாக உள்ளது. வரத்து 34 கனஅடி, திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 139 கனஅடி நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 28.90 அடியாக உள்ளது. 2 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
அரண்மனைப்புதூர் 6, வீரபாண்டி 9.2, சோத்துப்பாறை 2.6, போடி 53.2, பெரியாறு அணை 16.2, தேக்கடி 0.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.