சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். கோடை வெயில் மற்றும் கோடையில் தண்ணீர் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏரியில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியில் தண்ணீர் இருப்பு 50 சதவீதமாக குறைந்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி 1624 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு மொத்தம் 307 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்தாலும் செம்பரம் பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இந்த கோடைகாலத்தில் சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2963 மி.கனஅடியும், புழல் ஏரியில் 3300 மி.கனஅடியில் 2066 மி.கனஅடியும், சோழவரம் ஏரியில் 1081 மி.கனஅடியில் வெறும் 210 கனஅடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கன அடியில் 381 மி.கன அடியும், கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 797 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.