நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. மாலையில் இது 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் வேகமாக பாய்ந்து செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வெள்ளை நுரையுடன் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. அதே நேரத்தில் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அருவிகளின் அழகையும், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரையும் கண்டு ரசித்தனர்.
இதற்கிடையே தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்வதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பாதுகாப்பு கருதி ஆற்றின் கரையோர பகுதிகளில் இறங்கவோ, ஆபத்தான இடங்களுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7041 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று காலை 56.93 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 57.79 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 23.06 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.