தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த திங்கட்கிழமை காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்தது. பின்னர் அது மாலை 4 மணி நிலவரப்படி 4,500 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாகக் குறைந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மதியம் 2 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டு இருந்தது. இன்று காலையும் தொடர்ந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர்

இதே போல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரத்து 250 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 45.71 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

SCROLL FOR NEXT