தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 2,000 கன அடியாக நீடித்த நீர்வரத்து தொடர்ந்து இன்றும் அதே அளவில் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டி வருகிறது. நீர்வரத்து குறைந்த அளவில் நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காவிரி ஆற்றின் அழகை ரசித்து, பாதுகாப்பான பகுதிகளில் குளித்தும், பரிசல் சவாரி மேற்கொண்டும், எண்ணை மசாஜ் செய்து கொண்டும், மீன் உணவுகளை சுவைத்தும் தங்களது விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1,672 கன அடியாக இருந்தது. இன்று சிறிது அதிகரித்து வினாடிக்கு 1,825 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 61.45 அடியாகவும், நீர் இருப்பு 25.78 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று மேட்டூர் அணை மற்றும் மேட்டூர் அணை பூங்காவை காண வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் மேட்டூருக்கு வந்தனர். அவர்கள் மேட்டூர் அணையை பார்த்துவிட்டு பூங்காவில் அமர்ந்து அணை மீன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.