ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடி அளவில் வந்து கொண்டிருப்பதால் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை காணலாம். 
தமிழக செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக சரிவு

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

ஒகேனக்கல்:

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 38,315 கன அடி உபரி நீர் வெளியேற்றப் பட்டது

இதனால் தருமபுரி மாவட்ட ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்து இருந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 60ஆயிரம் கன அடியாக குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 55 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 22-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.