விலங்கினங்கள் உள்ளே விழுவதாகவும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சி பன்னீர்வேலி கிராமத்தில் காளியம்மன் கோவில் எதிர்புறம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.
30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பன்னீர் வேலி கிராமத்தில் உள்ள 200 குடும்பங்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் செல்போனில் டவர் கிடைக்காததால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறியுள்ளார்.
அப்போது துர்நாற்றம் வீசவே அங்கு பார்த்தபோது மனித கழிவு கழிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் பொது மக்கள் அங்கு குவிந்தனர். மேலும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ள இந்த தொட்டியில் மேலே மூடி இல்லாததால் தகர சீட்டால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
மேல்புற கான்கிரீட் உடைந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டியின் உள்ளே இறங்குவதற்கான ஏணி இல்லாததால் பல ஆண்டுகளாக தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை. இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் புறத்தில் அசுத்தம் செய்த மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பகுதியில் சிலர் மது குடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் எலி போன்ற விலங்கினங்கள் உள்ளே விழுவதாகவும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தொட்டியை அகற்றுவதற்கு முன்னரே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவு வந்தவுடன் தொட்டி அகற்றப்படும்என்றும், குடிதண்ணீரை ஆய்வுக்காக எடுத்து அனுப்ப உள்ளதாகவும், மாற்று ஏற்பாடாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.