தமிழக செய்திகள்

போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?

போதைப்பொருள் விவகாரத்தை முற்றிலும் மறுத்துள்ள காவல்துறை, செல்போன் திருட்டே இந்த கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக் கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார்.

இச்சூழலில் நேற்று முன்தினம் (ஆக.10) காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று உள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.

அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே எனக்கூறி அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

5 மாணவர்கள் கைது

இதுகுறித்து செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, திருவாரூரை சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் கல்லூரி மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இது செல்போன் விவகாரம் இல்லை, போதைப்பொருள் விவகாரம் என தகவல் வெளியாகி வருகிறது.

போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் கொலையா?

மாணவர் அமுதன் போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அமுதனின் பெற்றோர்.,

“கல்லூரி விஷமருந்தி என் மகன் இறந்ததாக பொய் சொல்கின்றனர். இந்த கல்லூரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் பிள்ளைக்கு நடந்தாவறு எந்தப் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது.

என் மகனிடம் கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக போலீசார் கேட்டனர். நீங்கள் கூறும் தகவல் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே தெரியும் எனக்கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தெரிவித்துவிட்டனர்.

அவர்கள் இருபது பேர் சேர்ந்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் அடித்து துடிதுடிக்க என் பையனை கொன்றுவிட்டனர்.” என கண்ணீர்மல்க கதறுகின்றனர்.

சட்டப்பேரவையில் அமுதன் கொலை தொடர்பாக விவாதம்

மாணவன் அமுதன் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,

“கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த அமுதன் எனும் மாணவர், அவருடன் படித்துவரும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். காரணம், வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை கோவை செட்டிப்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி அமுதனிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர்.

இந்தத் தகவலை ரகசியமாக வைத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறை, போதைப் பொருள் விற்பனை செய்த நபர்களை அழைத்து, புகார் கொடுத்தவர் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளனர்.

அந்த கோபத்தில்தான் மாணவர் அமுதனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

அரசு விளக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் இது ஒரு கோஷ்டி மோதலால் வந்த விளைவு என்று தெரிவித்தார்.

காவல்துறை கூறுவது என்ன?

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அளித்த விளக்கத்தின்படி, அமுதன் கல்லூரியில் தங்கியிருந்தபோது விடுதி சமையலாளரை தாக்கியதாகவும், அதனால் அவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் சம்பவத்தன்று அதிகாலை விடுதிக்கு சென்ற அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் முகமூடி அணிந்து மற்றொரு மாணவர் அறைக்குள் புகுந்து செல்போன்களைப் பறித்ததாகவும், அப்போது அமுதன் மட்டும் முகமூடி அணியாததால் எதிர் தரப்பினர் அவரை அடையாளம் கண்டதாகவும்,

இந்த செல்போன் பறிப்பு சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர் தரப்பு மாணவர்கள் அன்றே அமுதனை வழிமறித்து மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார். என காவல்துறை தெரிவித்துள்ளது.