மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆட்சி நீண்டகாலமாக நடைபெற்றது. அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பாஜக வெற்றி பெறும் என அந்த கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 2016, 2021 என அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து, மம்தா பார்னஜி 15 வருடங்களாக அசைக்க முடியாத முதல்வராக இருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 293 (பால்டா தொகுதிக்கு மறு வாக்குப்பதிவு) தொகுதியில் 196 இடங்களை கைப்பற்றி முதன்முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வுக்கு 15 வருடங்கள் ஆகிய நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக தொண்டர் ஒருவர் 3 கிலோ வெள்ளியில் பாஜக-வின் சின்னமான தாமரையை வடிவமைத்து பிரதமர் மோடிக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜம்ம-காஷ்மீர் மாநிலம் ஜம்முவை சேர்ந்தவர் ரிங்கு சவுகான். இவர் பாஜக-வின் தொண்டர். நகைக்கடையும் வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பிரதமர் மோடிக்கு பரிசு வழங்க வேண்டும் என 15 வருடங்கள் காத்திருந்த நிலையில், தற்போது அந்த காலம் அமைந்துள்ளது.
இது தொடர்பாக ரிங்கு சவுகான் கூறுகையில் "பெங்காலில் தாமரை மலர்வதற்காக 15 வருடங்கள் காத்திருந்தேன். இந்த வெற்றியை கவுரவிக்க இரவு பகலாக 3 கிலோ வெள்ளியில் தாமரையை வடிவமைத்துள்ளேன். இந்த தாமரை என்னைப் போன்ற தீவிர முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட பாஜக தொண்டர்களை பிரதிநிதிதுவம் படுத்தும். நாங்கள் பிரதமர் மோடிக்கு இது பரிசாக வழங்க விரும்புகிறோம். இந்த வெற்றிக்குப் பின்னால் அவருடைய உத்வேகம் உள்ளது. கட்சி சின்னத்தை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது” என்றார்.