தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75) இன்று பிற்பகல் 2.24 மணியளவில் சென்னையில் காலமானார்.
சுவாச பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் இவர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இவரை பலருக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினராகவே தெரியும். ஆனால் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது திமுகவில்.
வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்.
திமுகவில் பகுதிச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய வி.எஸ். பாபு, அக்கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொகுதி மறுசீரமைப்பில் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின்னர் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். 2016-ல் அவருக்கு வடசென்னை வடக்கு - மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதிமுகவில் இருந்துகொண்டே டிடிவி தினகரனுக்கு தீவிரமாக பணியாற்றினார். இதனால் 2018-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் 2022-ல் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த ஆண்டு மீண்டும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.