வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 72 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட இதயம் செயலிழப்பால் காலமானார்.
வி.எஸ்.பாபுவின் உடல் சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை - மேல்பட்டி பொன்னப்பன் தெரு சந்திப்பு அருகில், திருநாவுக்கரசு தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடல் அருகில் மனைவி, மகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.
முதலமைச்சர் விஜய் நேற்று மாலை வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், மரிய வில்சன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, சரத்குமார், கீர்த்தனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வீரபாண்டியன் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலையில் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது வீட்டின் அருகே பந்தல் போடப்பட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சர் ராஜ்மோகன் இன்று காலை வி.எஸ்.பாபுவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இன்று வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முயற்சி செய்தார். ஆனால் இயற்கையின் முடிவை மாற்ற முடியாது என்ற நிலை ஆகிவிட்டது என்றார்.
த.வெ.க. நிர்வாகிகள் மகேந்திரன், பூக்கடை குமார், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ப. ரங்கநாதன், கவுன்சிலர் சதீஷ்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் சமுதாய அமைப்புகள், குடியிருப்பு நல சங்கத்தினர் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வி.எஸ். பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. திரு.வி. க. நகர் மாநகராட்சி சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.