சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனாலும் ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதற்கான ஆர்வம் வாக்காளர்களிடம் அதிகரித்து காணப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வந்து ஜனநாயக கடமையாற்ற குவியத் தொடங்கினார்கள்.
அந்தவகையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் திவள்ளுவர் நகர் ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஏராளமான வாக்காளர்கள் வந்து வரிசையில் காத்திருந்தனர். 301-வது பூத்திலும் வாக்காளர்கள் ஒருவிரல் புரட்சி செய்து, ஜனநாயகத்துக்கு தங்களது பங்களிப்பை வழங்க தயாராக இருந்தனர்.
வாக்களிக்க தயாராக ஆவணங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக நின்றுக்கொண்டிருந்தவர்களின் அருகில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. அதில் பேசிய நபர், நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். இன்னும் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே என்னை முதலில் வாக்களிக்க அனுமதிப்பீர்களா? என்று சாந்தமாக கேட்டார். மேலும் அறுவை சிகிச்சைக்கு தான் செல்ல இருப்பது தொடர்பாக தனது செல்போனில் இருந்த தகவலையும் காண்பித்தார்.
இதை கேட்ட வரிசையின் முன்னால் நின்ற வாக்காளர்கள், அந்த டாக்டரை ஜனநாயக கடமையாற்ற அனுமதித்ததோடு, உயிரை காக்கும் மனிதாபிமான கடமையாற்றுவதற்கும் பச்சை கொடி காட்டினார்கள். இதனால் அந்த டாக்டர் வாக்களித்தது மட்டுமின்றி, போராடிய ஒரு உயிரையும் காப்பாற்றி ஒரே நேரத்தில் தனது 2 உரிமைகளையும் நிலை நாட்டியிருக்கிறார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் அதே வரிசையில் நின்ற இளகிய மனதுக்கு சொந்தக்காரர்களிடம் வந்த ஒரு வாலிபர் காலை 9.05 மணிக்கு விமான பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எனவே என்னை உங்களுக்கு முன்பாக வாக்களிக்க அனுமதி தருவீர்களா? என்று கேட்டார். அவர்களும் விட்டுத்தர வாலிபர் வாக்களித்துவிட்டு விமான பயணத்துக்கு புறப்பட்டு சென்றார். இதேபோல நடப்பதற்கே சற்று சிரமப்பட்டு வந்த மூதாட்டியையும், வரிசையில் நின்றவர்கள் தங்களுக்கு முன்பாக வாக்களிக்க அனுமதித்து மனிதநேயத்தை பிரதிபலித்தனர்.
இந்த நிகழ்வுகள் விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவது இல்லை என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. இதேபோல அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோன்று செல்போன் வைக்க தனி இடவசதி ஏற்படுத்தப்படவில்லை என்பது வாக்காளர்களுக்கு மனக்குறையை ஏற்படுத்துவதாக இருந்தது.