தமிழக செய்திகள்

சென்னையில் 1000 அதிகாரிகளுக்கு ஓட்டு எண்ணும் பயிற்சி - 234 தொகுதிகளில் இருந்து பங்கேற்பு

புதுச்சேரியைச் சேர்ந்த ஞானவேல் என்ற பயிற்றுனர் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகளை விளக்கிக் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி அமைதியாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டதால் மறு வாக்குப்பதிவு எங்கும் நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் 62 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்துவதற்கு பலத்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் முறையாக கையாள்வதற்கான ஒரு நாள் பயிற்சி சென்னையில் இன்று நடந்தது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிவஞானம், ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஸ்ரீதர், மனுவேல் ராஜ் ஆகியோர் தலைமையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

முடிவில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு பேசினார். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த ஞானவேல் என்ற பயிற்றுனர் வாக்கு எண்ணிக்கை செயல்முறைகளை விளக்கிக் கூறினார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டு எண்ணிக்கை செயல்பாட்டினை தொடங்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

தபால் ஓட்டுகள், ராணுவ வீரர்கள் ஓட்டுகள் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகளை எப்படி எண்ண வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.