தமிழக செய்திகள்

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: மதுராந்தகம், தாராபுரத்தில் வெற்றி பெறுவது யார்?- பிற்பகலில் முடிவு தெரியும்

மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் தினசரி 3 அலுவலர்களும், சட்டமன்ற தொகுதிக்கு தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மது​ராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். நாளை காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்கிற இறுதி நிலவரம் நாளை பிற்பகலில் தெரிந்து விடும்.

மது​ராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்

மது​ராந்​தகம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமர​வேல், தி.மு.க. வேட்பாளர் பரந்​தாமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்​பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி​ராமன் மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர். தாராபுரம் தொகு​தி​யில் த.வெ.க. வேட்பாளர் சத்ய ​பா​மா, தி.மு.க. வேட்பாளர் சுகன்​யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானு​ம​தி, இந்​திய கம்யூனிஸ்டு வேட்பாளர் லட்​சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்​திகா மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டது.

வாக்குப்பதிவு

2 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் 1,79,337 பேர் வாக்களித்து இருந்தனர். 80.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழக ஒருங்கிணைந்த பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

3 அடுக்கு பாதுகாப்பு

தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய துணை ராணுவப்படை, ஆயுதப் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு

மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் தினசரி 3 அலுவலர்களும், சட்டமன்ற தொகுதிக்கு தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து வேட்பாளர்களும், காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக தங்களின் பிரதிநிதிகளை நியமித்து அவர்கள் பாதுகாப்பு வளையத்தின் உட்பகுதிக்கு வெளியே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகள் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய பயன்படுத்தப்பட்ட வி.வி.பாட்டில் சேகரிக்கப்பட்ட சீட்டுகள் தனியாக எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் 5 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை மாவட்ட தேர்தல் அலுவலரான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

தாராபுரம்

தாராபுரம் தொகுதியில் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளர் சார்பாக ஒரு முகவர் நியமிக்கப்படுகிறார். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் ஒலி அல்லது ஒளியை பதிவு செய்யும் எந்த ஒரு கருவிகளையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வெற்றி பெறப்போவது யார்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

2 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

நாளை காலை 10 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்கிற இறுதி நிலவரம் நாளை பிற்பகலில் தெரிந்து விடும்.

SCROLL FOR NEXT