தமிழக செய்திகள்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 20ஆக உயர்வு... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், இன்று மதியம் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

அரசு அனுமதியுடன் இயங்கிவரும் ஆலையில் வெடிவிபத்தின்போது 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு பணிகள் நடைபெற்று வரும்நிலையில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT