தமிழக செய்திகள்

பல விதமான வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வந்த விநாயகர் சிலைகள்

3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வித விதமான விநாயகர் சிலைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர் 14-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கொசப்பேட்டை

கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் தற்போது சென்னைக்கு வர தொடங்கியுள்ளன. சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் இப்போதே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகள்

3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன. குழந்தை வடிவ விநாயகர், லட்டுடன் கூடிய விநாயகர் சிலைகள் கண் கவரும் வகையில் இருக்கின்றன.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி சிலைகள் தயாராகி வந்துள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் மேலும் பல விநாயகர் சிலைகள் சென்னைக்கு வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அணிவகுத்து நிற்கும் விநாயகர் சிலைகளை அந்தப் பகுதிகள் பார்த்து, ரசித்து சென்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மழையில் நனைந்து விடாமல் இருக்க விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.5 ஆயிரத்தில் ரூ.25 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.