தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தி சாமி ஊர்வலத்தில் மோதல்: அரசு பஸ் டிரைவர் அடித்து கொலை - 6 பேர் கைது

சாமி ஊர்வலம் 13-வது தெரு வழியாக சென்றபோது திடீரென பாதியில் திரும்பியது.

விநாயகர் சதுர்த்தி விழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ கணபதி கோவில்

சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது45). மாநகர பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே உள்ள ராஜ கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு 9.30மணி அளவில் சாமி ஊர்வலம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மோதல்

சாமி ஊர்வலம் 13-வது தெரு வழியாக சென்றபோது திடீரென பாதியில் திரும்பியது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாமி ஊர்வலம் தெரு முழுவதும் வந்து செல்ல வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதற்கு பஸ் டிரைவர் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

எனினும் ஆத்திரம் அடங்காத ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரும் பயங்கர ஆக்ரோஷத்துடன் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆனந்த் தனது கையால் சீனிவாசன் நெஞ்சில் ஓங்கி குத்தினார். இதில் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மயக்க நிலையில் இருந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கே‌.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ராமாபுரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் ஐ.டி.ஊழியர் ஆனந்த் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

9 பேரிடம் விசாரணை

மேலும் இந்த கொலை தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 9 பேரை பிடித்து மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT