குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் அணைக்கரை பகுதியில், கடந்த ஒரு வாரமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் குடிநீரின்றி அன்றாட தேவைகளுக்கும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
எங்கள் பகுதி குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தா சலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைத்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.