சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து பொன்னேரி அடுத்த மாத வரம் பஸ்நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரியை அடுத்த மாதவரம் ஆமுர் ஒன்றிய சாலையை பயன்படுத்தி மாலிவாக்கம், சிறுவாக்கம், வடக்கு பட்டு, கங்காடி குப்பம், குதிரைபாளையம் அகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த சாலை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலை மிகவும் சேதம் அடைந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து பொன்னேரி அடுத்த மாத வரம் பஸ்நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.