முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகிற 23 -ந்தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், திருப்பூரின் ஜவுளித்துறை புதிய வர்த்தக உச்சத்தைத் தொட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தொண்டர்களிடமும் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக, முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்தியேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், மிகக்குறுகிய காலக்கட்டமே இருப்பதால், தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள் அனைத்தும், இந்த பிரத்தியேக ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரம் ஒதுக்கி, தொழிலாளர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த இறுதித் திரைப்படத்திற்கான வரவேற்பு தமிழக எல்லையைத் தாண்டியும் எதிரொலித்து வருகிறது. கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கான ஆடைகளுக்கான ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வந்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.
அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதலமைச்சரைக் காணப்போகும் ஆவலில், ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டி-ஷர்ட் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலுக்கும் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தைத் தந்துள்ளதாகத் தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.