தமிழக செய்திகள்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் - விஜயதாரணி

மக்கள் பண பலம், சாதி மதம், அதிகார வர்க்கத்தை புறக்கணித்து முதலமைச்சர் விஜய் பக்கம் நிற்கிறார்கள்.

குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி.

காங்கிரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்து கட்சிப் பணிகளை திறம்பட செய்து வந்தார். அவர் கட்சியில் இணைந்து ஆண்டுகள் கடந்த போதும் அவருக்கு பா.ஜ.க.வில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லாததால் விஜயதாரணி விரக்தி அடைந்தார்.

இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று த.வெ.க.வில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தமிழக மக்கள் த.வெ.க. தலைவர் விஜய்யை முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். வருங்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு த.வெ.க. பல திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

தமிழ்நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி, போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பு ஆகியவை முதலமைச்சர் விஜய் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து விஜய் ஆட்சி தமிழகத்தில் நிரந்தரமாக தொடர வேண்டும் என்று தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பெருமையோடு அவரை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

மக்கள் பண பலம், சாதி மதம், அதிகார வர்க்கத்தை புறக்கணித்து முதலமைச்சர் விஜய் பக்கம் நிற்கிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT