தவெகவுக்கு மாறிய விஜயதாரணி, விளவங்கோடு தொகுதியில் இருந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், காங்கிரஸில் இருந்து விலகி, தன் பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2024-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார்.
தற்போது, பா.ஜ.க-வில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில், தற்போது சென்னையில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். பா.ஜ.க-வில் தனக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் மக்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாததே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தமிழக பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "என்னுடைய எம்.எல்.ஏ பதவி உட்பட பல பொறுப்புகளைத் துறந்துவிட்டுத்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்தேன். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனக்கு எந்தவொரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. மக்கள் பணியாற்றும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது." கடந்த தேர்தலில் நான் நாகர்கோவில் தொகுதியைக் கேட்டேன். கடைசி வரை தருவதாகக் கூறிவிட்டு, பின்னர் என்னை கட்டாயப்படுத்தி விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வைத்தார்கள்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க என்பது இனி எழுந்து நிற்க முடியாத ஒரு கட்சியாகிவிட்டது. அங்கிருந்த கொஞ்ச நஞ்ச கூட்டத்தையும் அண்ணாமலை தன் பக்கம் இழுத்துச் சென்றுவிட்டார். இப்போது, விரல் விட்டு எண்ணக்கூடிய 4 அல்லது 5 தலைவர்கள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள்."தமிழக பா.ஜ.க-வை கடுமையாகச் சாடிய அவர், "இனி அந்த வண்டி ஓடாது. 'ஸ்டார்ட்' ஆகாத வாகனமாக நடுரோட்டில் நிற்கிறது" என உவமையோடு விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, த.வெ.க-வில் தன்னை வரவேற்ற விதம் ஒரு குடும்பப் பிணைப்போடு இருந்ததாகவும், அது தன் மனதைத் நெகிழ வைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புதிய அரசியல் பயணம் தனக்கு மனதளவில் பெரும் உத்வேகத்தையும், மக்கள் பணியாற்றுவதற்கான புதிய உற்சாகத்தையும் தந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.