தமிழக செய்திகள்

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திடும் விஜய்?

ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக எடுத்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

இதனிடையே த.வெ.க. தலைவர் விஜய், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். . அதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூழலில் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. தீவிரமாக எடுத்து வருகிறது.

ஒரு கட்சியின் வெற்றிக்கான கதாநாயகனாக எப்போதுமே அக்கட்சி வெளியிடும் தேர்தல் அறிக்கைதான் இருக்கும். அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த தேர்தல் அறிக்கையும் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், அந்த தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவருடைய முதல் கையெழுத்து இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சராக விஜய் ஆட்சி பொறுப்பேற்றதும் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பெண்கள் குறிப்பிட்ட பேருந்திற்காக காத்திருக்கும் நிலை மாறும்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. தற்போது வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.