எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும்.
பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் முதலமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.
சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து, “வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன், அவரது கணிப்பு பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள். யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது கணிப்பை தெரிவித்தார்.
விழாவில் ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியதாவது:-
முதலமைச்சர் விஜய் கையில் கட்டி இருக்கும் சிகப்பு கயிறு முருகப்பெருமானின் அருளின் அடையாளம். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.
அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதலமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதலமைச்சர் விஜய் தான்.
எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது. தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த இந்த கணிப்புகள் விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.