கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்து, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு, வளம் பெருக வேண்டும் எனவும், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் தழைக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இருள் நீங்கி ஒளி பிறக்கும் இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, மனநிறைவு, அமைதி, அன்பு மற்றும் வளம் பெருகட்டும்.
தீமைகளை வென்று நன்மை நிலைபெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையை நமக்கு உணர்த்தும் தீபாவளித் திருநாளில், ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களின் வாழ்விலும் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்கட்டும். சாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவமும், மனிதநேயமும் தழைத்தோங்கட்டும். வண்ணமயமான பட்டாசுகளின் ஒளியும் ஒலியும், இனிப்புகளின் தித்திப்பும், புத்தாடைகளின் புதுமகிழ்ச்சியும் இணைந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் மலரச் செய்யட்டும்.
இந்தத் தீபாவளி அனைவருக்கும் புதிய நம்பிக்கைகளையும், புதிய வாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் வழங்கட்டும்.
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.