குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே உட்கட்டமைப்பு வசதி பணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் முடிக்க வேண்டும் என திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்தார்.
திருவனந்தபுரத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் திவ்யகாந்த் சந்திராகரை சந்தித்த விஜய் வசந்த், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரெயில் பாதைத் திட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், இணைப்புச் சாலைகள், விவசாயத்திற்கான நீர்வழிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நுள்ளிவிளை மேம்பால பணிகளை விரித்து முடிக்க வேண்டும் எனவும், வெகு நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள விரிகோடு மேம்பால பணிகளை பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்கு ஊருக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக குறிப்பாக குமரி மக்கள் அதிகமாக உள்ள சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
அது போன்று கொல்லம் - சென்னை அனந்தபுரி ரயிலில் நிலவும் கடுமையான கூட்டத்தை எடுத்து கூறி திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு நாகர்கோவில் வழியாக இன்னொரு ரெயில் ஒன்றினை இயக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மேலும் இரணியல், குழித்துறை, குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதற்கான கோரிக்கையும் முன் வைத்தார்
மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து, நிலுவையில் உள்ள பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டத்தை வகுத்து விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வலியுறுத்தினார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் ரெயில்வே மேற்கு மண்டல மேலாளரை சந்தித்து இந்த கோரிக்கைகளை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் மற்றும் செல்வின், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர், ஸ்ரீ நிதின் நார்பர்ட், சீனியர் கோட்ட வணிக மேலாளர், ஸ்ரீ எழிலன், மூத்த கோட்டப் பொறியாளர் ஒருங்கிணைப்பு மற்றும் குமரி ரெயில்வே ஆலோசனை கமிட்டி பொறுப்பாளர் சூசைராஜ் ஆகியோர் உடன் இருந்தார்.