தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், இன்று காலை 10 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். "சி. ஜோசப் விஜய் எனும் நான்" என்று உறுதிமொழி கூறி அவர் பதவியேற்றபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜயுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் (9 அமைச்சர்கள்) புதிய அமைச்சரவையில் பதவியேற்றனர். இதில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன் போன்ற முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகை திரிஷா, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகரன் - ஷோபா உள்ளிட்டோர் நேரில் கலந்துகொண்டனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார்.
தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமைந்தார். இந்நிலையில் இந்த பதவியேற்பை தமிழ்நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தவெக தொண்டர்கள் பல இடங்களில் இனிப்புகளை வழங்கி உற்சாகமடைந்து வருகின்றனர்.