விஜய் - சங்கீதா 
தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து

த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நீதிபதி விசாரணை

இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்றைய விசாரணை

அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.