தமிழக செய்திகள்

மண்டியிட்டு பிரார்த்தனை... திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரிப்பு..! திருச்சியில் தவெக தலைவர் விஜய் ‘ரோடு ஷோ’

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் விஜய் திருச்சிக்கு வந்தார். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் தனது பிரசாரத்தை தொடங்கிய விஜய், தென்றல்நகர், கே.கே.நகர் பஸ்நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர்.கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல், கோழிப் பண்ணை சாலை, கொட்டப்பட்டு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே வாக்கு சேகரித்து வருகிறார்.

பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் விமான நிலையம் வந்தடைகிறார்.

இதற்கிடையே, பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ள தவெக தலைவர் விஜய் அங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.