தமிழக செய்திகள்

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை - ஓர் பார்வை!

விஜய் அவ்வாறு இருப்பதற்கு அவரே ஒருமுறை காரணம் தெரிவித்துள்ளார்.

1945இல் மெட்ராஸ் மாகாணத்தில் தங்கச்சிமடத்தில் ஒரு தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் சேனாபதி ஆல்பர்ட் சந்திரசேகரன் (எஸ்.ஏ. சந்திரசேகர்).

திரைப்படங்களில் பணியாற்றி வந்த இவர் 1978இல் 'அவள் ஒரு பச்சை குழந்தை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

1981இல் சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் புகழ்பெற்றார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சந்திரசேகர் சோபா தம்பதிக்கு 1974ஆம் ஆண்டு ஜூன் 22இல் ஜோசப் விஜய் பிறந்தார். சிறு வயதில் இருந்தே தந்தையின் படப்பிடிப்புகளுக்கு உடன் சென்ற விஜய்.

அந்த சமயத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார்.

இந்தப் படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் விஜய் நடிக்க ஆரம்பித்தார். எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலில் படத்தில் தோன்றினார் விஜய்.

10 வகுப்புக்கு பிறகு விஜய்யை சினிமா ஆசை ஆக்கிரமித்தது. தந்தை கேட்டதற்கிணங்க டிகிரி படிக்க சம்மதித்த விஜய் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் பிரிவில் சேர்ந்து ஓராண்டு பயின்றார்.

சினிமா வாழ்க்கை

அப்போது தந்தை சந்திரசேகரின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் விஜய் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. 6- 7 மாத இடைவெளிக்கு பின் மீண்டும் கல்லூரிக்கு சென்றார்.

பின்னர் ஒரு வருடம் கழித்து 1993இல் விஜய்காந்துடன் இரண்டாம் கதாநாயகனாக விஜய்யை நடிக்க வைத்தார் அப்படத்தின் இயக்குநரும் விஜயின் தந்தையுமான சந்திரசேகர். விஜயகாந்தின் பிம்பவம் விஜய்யை நடிகனாக மக்களிடம் நிறுவியது.

1994இல் வெளிவந்த ரசிகன் திரைப்படத்தில், இளைய தளபதி என்ற பட்டத்தை தனது மகனுக்கு சூட்டினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

அடுத்தடுத்து தந்தையின் தயாரிப்பில் படங்கள் வெளியாக ஆரம்பிக்க கல்லூரிப் படிப்பிற்கு நேரமில்லாமல் போனது.

தொடர்ந்து வருடத்திற்கு குறைந்தது 3 படங்களில் நடித்து வந்தார் விஜய். 33 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வந்துள்ளார்.

2004இல் வெளியான கில்லி, 2005-இல் வெளியான திருப்பாச்சி, சிவகாசி ஆகிய திரைப்படங்கள் அவரை எல்லாத் தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தன.

இதற்குப் பிறகு அவரது சில படங்கள் தோல்வியைத் தழுவ, 2012-இல் வெளியான துப்பாக்கி, அவரை மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக நிறுவியது.

2017க்குப் பிறகு விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, தி கோட் ஆகிய படங்கள் வந்தன.

இயல்புகள்:

விஜய்யிடம் பலரும் பாராட்டும் விஷயம் படப்பிடிப்பிற்கு 8 மணிக்கு வர வேண்டும் எனச் சொன்னால் 7.50க்கு தயாராக இருப்பார் என்பதுதான். மேலும் விஜய் படத்தில் தோன்றுவது போலன்றி நேரில் பேசும்போது அதிகம் பேசாதவராகவே இருப்பார் என்று பலர் கூறியிருக்கின்றனர். யாருடனும் அதிகம் பழகாதவராக விஜய் இருப்பதற்கு அவரே ஒருமுறை காரணம் தெரிவித்துள்ளார்.

பத்து வயதிலேயே தங்கை வித்யாவின் மரணத்தால், பெற்றோரின் ஒரே குழந்தையாக வளர்ந்ததும் தன் வயதுக்கேற்ற ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகள் இல்லாததும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என விஜய் ஒரு முறை தெரிவித்தார்.

ஆனால் விஜயின் அரசியல் பிரவேசம் முற்றிலும் மாறுபட்ட அவரின் பரிணாமத்தை காண்பித்தது.

அரசியல்

16 ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், "ஒரு கட்டத்தைத் தாண்டி உதவி செய்ய கையில் அதிகாரம் இருக்க வேண்டும். ஒரு கட்டம் வரைதான் ரசிகர் மன்றமாக, இயக்கமாக இருக்க முடியும். அதைத் தாண்டிவந்துவிட்டால் அதிகாரம் தேவைப்படுகிறது" என்றார் விஜய்.

அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் அடிபட்டன.

இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

மக்கள் பணிகளுக்காக 2009ஆம் ஆண்டு ஜூலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கினார்.

2017ஆம் ஆண்டு அனிதா என்ற மாணவி மரணம் நிகழ்ந்த போது அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.

2018ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கேரளாவில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு விஜய் நிதியுதவி அளித்தார்.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

முடிவில் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார் விஜய். முழுக்க முழுக்க ஆளும் திமுக அரசை விமர்சித்தும் அவர்களுக்கு தான் ஒருவனே மாற்று என்றும் விஜய் தனது அரசியலை முன்வைத்தார்.

இருப்பினும் 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடாது என அறிவித்தார். அதே ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார் விஜய். 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த அவரது கூட்டத்தில் 41 பேர் பலியாயினர்.

இது விஜய்க்கு பெரிய அடியாக இருந்தபோதும் சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் மீண்டும் தன்னை ஆளும் திமுக அரசுக்கு மாற்றாக நிறுவிக்கொண்டார் விஜய். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரின் கடைசி படம் என்று சொல்லப்படும் ஜனநாயகன் சென்சார் வாரியதால் முடக்கப்ட்டது.

இது 2013 வெளியான தலைவா தொடங்கி அடுத்த வந்த அனைத்து படங்களையும் அவரை மக்களுக்கான தலைவன் என்ற பிம்பத்தை முன்னிறுத்தும் படமாக இருந்தது. சென்சார் வாரியம் ஒப்புதல் இல்லாமல் படம் முடங்கிப்போனது. இடையில் இணையத்திலும் இப்படம் கசிந்தது.

இவை அனைத்தும் விஜய் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறார் என்ற கருத்தை மக்களிடம் உண்டு பண்ணியது. தேர்தல் பிரசாத்தின் போதும் மண்டல வாரியாக சில இடங்களுக்கு மட்டுமே சென்றார் விஜய். வேறு பல பிரசாரங்கள் அனுமதியின்றி நடைபெறாமல் போயின.

இருப்பினும் விஜய் என்ற ஒற்றை அடையாளம் மக்களுக்கு போதுமானதாக இருந்தது. தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜயின் தவெக, திமுக கூட்டணியில் நின்று வென்ற காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகியவற்றின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்தது.

விஜய் வெற்றிக்கு சமூக வலைத்தளத்தில் அவரின் டிஜிட்டல் பிரசாரம் வெகுவாக அவருக்கு கைகொடுத்தது எனலாம். இதற்கு பலமுறை, இன்று (மே 5) முதல்வராக பதவியேற்கும்போது கூட விர்சுவல் வாரியர்ஸ்க்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார்.

ஒரு நடிகராக தொடங்கி அரசியல்வாதியாக பரிணமித்து இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உருவெடுத்திற்கும் விஜய் உடைய செயல்பாடுகள் குறித்து பல தரப்பினரிடத்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.