சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற 4-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 28-ந்தேதி அதிகாலையில் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் வழங்கப்பட்டது.
அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் விஜய் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். சூரசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.
திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சீரடி சென்றார். அங்கு சாய்பாபாவை, விஜய் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் விஜய் நேற்று மாலையே சென்னை திரும்பினார்.
தேர்தல் முடிவு வெளியாக இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் விஜய், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, வருகிற 2-ந்தேதி விஜய் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து நாகூர் தர்காவுக்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் களத்தில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஜய், தனது தேர்தல் வெற்றிக்காகவும், கட்சி ரீதியான தடைகளை கடப்பதற்காகவும் இந்த தொடர் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருவதாக கருதப்படுகிறது.