தமிழக செய்திகள்

‘விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை’ - நயினார் நாகேந்திரன்

தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும் பேசிய விஜய் இப்போது எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை.

நெல்லையில் இன்று பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தி.மு.க.வை சேர்ந்த தயாசங்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

பாலியல் குற்ற சம்பவங்கள்

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, பாலியல் குற்ற சம்பவங்கள் தான் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும் பேசிய விஜய் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை.

குதிரை பேரம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஆதவ் தான் தொடர்ந்து விலை பேசி வாங்கி வருகிறார். இது ரொம்ப நாட்கள் நீடிக்காது. வரும் காலம் பா.ஜனதாவின் காலமாக இருக்கும். விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி என்பது இல்லை. விஜய், அண்ணாமலை போன்ற நபர்கள் புதிய கட்சி தொடங்கி உள்ளதால் பாரதிய ஜனதாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 12 ஆண்டுகள் எங்கள் பிரதமர் நல்லாட்சி நடத்தி வருகிறார்.

ரஜினி

நடிகர் ரஜினியுடன் அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார். அதுதொடர்பான புத்தகத்தை ரஜினியிடம் கொடுத்தேன். கடந்த ஆட்சியை போன்று இந்த ஆட்சியிலும் போதைப்பொருளை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் விஜய் தவறி விட்டார்.

தி.மு.க.வுடன் கூட்டணி?

தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி ஏற்படுமா என்று கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் அது குறித்து பதில் தெரிவிப்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் சரி எப்போதுமே அவரது செயல்பாடு சரியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.