காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே 27 அன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுமானத்திற்கு 'பூமி பூஜை' செய்ய முயன்ற தகவலைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர் ஆணையத்திற்கும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரினார்.
மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழகத்திற்கான உரிய நீரைப் பெறவும், கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
திமுக அரசை விமர்சித்துப் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளின் போது அப்போதைய திமுக அரசு சரியான முறையில் வழக்கை நடத்தத் தவறிவிட்டது. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட சட்டப்பூர்வத் தவறுகளே, இன்று காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன" என்று சாடினார்.
மேலும், "காவிரி விவகாரம் என்பது அரசியல் லாபத்திற்கான விஷயம் அல்ல; அது தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை. தமிழகத்தின் நீர் உரிமையை முழுமையாக மீட்கும் வரை விஜய் அரசு அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ வழிகளிலும் தொடர்ந்து போராடும்.
மாநில நலனுக்கு உதவும் வகையில் யார் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்க அரசு தயங்காது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.