தமிழக செய்திகள்

சௌகார் ஜானகி மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்

சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்

முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.

திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைவு

நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

விருதுகள்

கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.

திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌவுக்கார் ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.